கன்யாகுமரி மண்டைக்காடு “ஹிந்து சமய மாநாடு” கோரிக்கைக்கு செவி சாய்கவில்லை எனில் மிகப்பெரும் போராட்டத்தை ஒட்டுமொத்த ஹிந்து மக்கள் மேற்கொள்வார்கள் என இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் டாக்டர் த. அரசுராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கன்யாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவிற்கு ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் கடந்த 86 ஆண்டுகளாக “ஹிந்து சமய மாநாடு” நடைபெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடம் ஹிந்து சமய மாநாடு நடத்துவதற்கு கொடுக்கப்பட்ட இடமாகும். அந்த நிகழ்ச்சியில் சத்சங்கம், பஜனை திருவிளக்கு பூஜை, சமய சொற்பொழிவு, ஹிந்துக்களுக்கு நலத்திட்ட உதவிகள், ஹிந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனை இந்த ஆண்டு கிறிஸ்தவர்கள் தூண்டுதல் காரணமாக தடுக்கும் நோக்கத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் அனுமதி அளிக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருப்பது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே குமாரகோவில் தேரோட்டம், காவடி திருவிழா என ஹிந்துக்களின் விழாக்களுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது. 86 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சமய மாநாட்டை தடை செய்துவிட்டு தி.மு.க பிரச்சார மேடையாக மாற்ற முயற்சி மேற்கொள்வதை தடுக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் பாரம்பரியமாக ஹைந்தவ சேவா சங்கத்தின் ஹிந்து சமய மாநாட்டை நடத்த கோரி ஹிந்து மக்கள் வெகுண்டு எழுந்து பத்து இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டதிற்கு இந்து முன்னணி தனது முழு ஆதரவையும் தெரிவித்து கொள்கிறது. இந்த போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்கவில்லை எனில் கன்னியாகுமரி மாவட்ட ஓட்டு மொத்த ஹிந்து சமுதாயமும் மிகப் பெரிய அளவில் இறங்கும். எனவே, தமிழக முதல்வர் கன்னியாகுமரி மாவட்ட ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவிற்கு ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடைபெறும் ஹிந்து சமய மாநாட்டை கடந்த காலங்களை போன்று நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.” என தெரிவித்துள்ளார்.