முஸ்லிம் சுல்தானியங்களிடம் சுபேதாராக இருந்த ஷாஹாஜியின் மகனாகப் பிறந்து, பதினான்கு வயதில் ‘ஹிந்து ஸ்வராஜ்யம் அமைப்பேன்’ என ரோஹிதேஸ்வர் சன்னதியில் ரத்த சபதம் செய்து, சத்ரபதியாக ஆனவர் சிவாஜி.
முழு பாரதமும் துருக்கிய, முகலாய அன்னியரிடமிருந்து விடுதலை பெறவேண்டும், இமயத்தின் மேலேயும், சிந்துவைத் தாண்டியும் காவிக்கொடி பறக்க வேண்டும் என்பது சத்ரபதி சிவாஜியின் வேட்கை.
ஒளரங்கசீப்பின் மிகப் பெரிய முகலாய ராஜ்யத்துக்கும், தக்காணத்தில் இஸ்லாமிய சுல்தானியங்களுக்கும் மத்தியில் சிவாஜி தனது ராஜ்யத்தை மகாராஷ்ட்ரத்தின் பூனா முதல் தமிழகத்தின் செஞ்சி வரை நீளவாக்கில் அமைத்தார்.
சுவாமி விவேகானந்தர் லாகூரில் ஹிந்துயிஸத்தின் பொதுவான அடிப்படைகள்’ என்ற தலைப்பில் பேசியபோது அதில், இன்றைய உலகில் நமது பாரம்பரியம் மிக்க தேசத்திற்கு ஹிந்து’ என்ற அடையாளம் எவ்வளவு தேவை என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறார். மேலும், 1893ல் சென்னையில், ‘தேசத்தின் உண்மையான உள்ளுணர்வைப் பிரதிபலித்த பாரதத் தாயின் தலைமகன் சிவாஜி. வருங்கால பாரதம் ஒரே குடையின் கீழ் வலுப் பெறப் போவதை நிதர்சனமாய் காட்டியவர் அவர்’ என்று கூறியுள்ளார்.
சிவாஜி வணங்கிய காளிகாம்பாள் கோயிலில், பக்தியோடு வழிபட்டு வந்த மகாகவி பாரதியார், சத்ரபதி சிவாஜி, தனது படை வீரர்களுக்கு ஆற்றும் வீர உரையாக, ஒரு கவிதையை எழுதியுள்ளார். அதில், ‘வந்தேமாதரம்’ எனத் துவங்கி “பாரத நாடு பார்க்கெலாம் திலகம்; நீரதன் புதல்வர், இந் நினைவகற்றாதீர்” என்று சிவாஜி கூறுவதாக பறைசாற்றுகிறார் பாரதி.
“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்” என்று முழங்கிய திலகர், சிவாஜியின் பிறந்த நாளைப் பெருமையுடன் கொண்டாடச் செய்தார்.
‘இது ஒரு தேசமே அல்ல’ என்ற ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற ஊக்கம் கொடுத்தது ஹிந்து தேசிய உணர்வே.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் துவக்கிய பரம பூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் மனதிலும் இது ஹிந்து ராஷ்ட்டிரம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
சங்க ஸ்வயம்சேவகர்களுக்கு, சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை சம்பவங்களும், அவருடைய அணுகுமுறையும் உத்வேகம் அளிப்பவை.
அனைவருக்கும் ஹிந்து சாம்ராஜ்ய தின வாழ்த்துக்கள்!