மீண்டும் ஹிஜாப் சர்ச்சை

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரு பல்கலைக்கழக கல்லூரி வளாகத்திற்குள் நீதிமன்ற இடைக்கால உத்தரவையும் மீறி 44 முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அந்த கல்லூரி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து அக்கல்லூரி மாணவ மாணவியர் கல்லூரி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளை கண்டித்தும் அனைவரும் ஒரே சீருடை அணிந்து வருவதை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர். ‘உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி நாங்கள் கல்லூரி நிர்வாகத்திடம் மனு அளித்தும் அவர்கள் அதை செயல்படுத்தவில்லை. பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திலும் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றுமாறு பெற்றோர் வலியுறுத்தினர், பின்னர் மே 16 அன்று மங்களூர் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் மாணவர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு, ஹிஜாப் அணிய தடை உள்ளிட்டவற்றை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனினும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருகின்றனர். மாணவர்களின் கடுமையான எதிர்ப்புக்கு பயந்து, தற்போது உத்தரவை அமல்படுத்த அதிகாரிகள் யோசித்து வருகின்றனர். அதேசமயம், சில ஆசிரியர்கள் வேண்டுமென்றே முஸ்லிம் மாணவிகளை வகுப்பறைகளில் ஹிஜாப் அணியத் தூண்டுகின்றனர்’ என போராட்டத்தில் ஈடுபட்ட சில மாணவர்கள் தெரிவித்தனர். அங்கு பயிலும் சில முஸ்லிம் மாணவிகள், ஹிஜாப் சீருடையின் ஒரு பகுதி, கல்லூரி தகவல் குறிப்பில் ஹிஜாப் குறிப்பிடப்பட்டுள்ளது, நாங்கள் துப்பட்டாவை தான் தலையை மறைக்க பயன்படுத்துகிறோம்; இது ஹிஜாப் அல்ல என்று கூறி தங்கள் செய்கையை நியாயப்படுத்த முயன்றனர்.