பூலித்தேவன் (1715 -1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரர். பாரத விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751ம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் பாரதத்தின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய் கலகத்திற்கு (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
1750ல் ராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்று ஆணவமாக அறிவித்தான். இதனால் வெகுண்டெழுந்த பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தான். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றான் என ‘பூலித்தேவன் சிந்து’ என்ற கதைப்பாடல் கூறுகிறது.
1755ம் ஆண்டு கர்னல் கீரோன், தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் கப்பம் வசூலிக்கும் உரிமை வெள்ளையருக்குக் கிடையாது என வீர முழக்கமிட்டு விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.
1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த புலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 அக்டோபர் மாதம் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சன் புலித்தேவனிடம் தோற்றான்.
1760ம் ஆண்டு யூசுப்கான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766ம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிப்வால், பூலித்தேவரை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 12 ஆண்டுகள் போரிட்டான். அதன் பின் பூலித்தேவர் தோல்வியடைந்தார். தலைமறைவானார். நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார்.