ஹெலிகாப்டர் ஒப்படைப்பு

இந்திய விமானப்படைக்கு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்) நிறுவனத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட லகுரக போர் ஹெலிகாப்டரை (எல்.சி.எச்) பிரதமர் நரேந்திரமோடி வரும் 19 நவம்பர் அன்று ஜான்சியில் நடைபெறவுள்ள ‘ஜான்சி ஜல்சா’ நிகழ்வின்போது விமானப்படையிடம் ஒப்படைக்க உள்ளார் என்று பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் தெரிவித்தார். கணிசமான போர்தளவாட ஆயுதங்கள், எரிபொருளுடன் 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் தரையிறங்கக்கூடிய மற்றும் புறப்படக்கூடிய உலகின் ஒரே தாக்குதல் ஹெலிகாப்டர் இது என்பது இதன் சிறப்பம்சம். மேலும், விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் உட்பட கடற்படைக்காக, ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் கீழ் டி.ஆர்.டி.ஓ வடிவமைத்த மேம்பட்ட மின்னணு வார் ஃபேர் தொகுப்பையும் பிரதமர் இந்நிகழ்ச்சியில் ஒப்படைக்கிறார். ரூ. 400 கோடி மதிப்பில் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்க உள்ள கவச வாகன எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகளின் புரொபல்ஷன் அமைப்பிற்கு அன்றைய தினம் அடிக்கல் நாட்டும் பிரதமர், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தின் 360 டிகிரி மெய்நிகர் சுற்றுப்பயண செயலி, பாதுகாப்பு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் கியோஸ்க் திறப்பு என இரண்டு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.