காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக் காலத்தில், கடந்த 2010ல் இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து பாரதத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ. 3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் ரூ. 360 கோடி லஞ்சப் பணம் இங்குள்ள இந்திய தலைவர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியது தொடர்பான வழக்கை சி.பி.ஐ, அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது. இதில், இடைத்தரகராக செயல்பட்ட பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் மைக்கேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். விசாரணைக்குப் பிறகு இரண்டு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இவ்வழக்கில் விமானப்படை தளபதியாக இருந்த எஸ்.பி. தியாகி, சோனியாவின் மருமகனான ராபர்ட் வத்ராவின் நண்பர் ராஜீவ் சக்சேனா உள்ளிட்ட பலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.