குஜராத் சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தோ்தல் நடைபெற உள்ள சூழலில் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்த குஜராத் மாநில செயல் தலைவர் ஹர்திக் படேல் கடந்த மே 19ம் தேதி காங்கிரசில் இருந்து விலகினார். நேற்று அவர், குஜராத் மாநில பா.ஜ.க தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார். அப்போது பேசிய அவர், “நான் பாஜகவில் இணைந்துள்ளேன். கட்சியில் ஒரு தொண்டனாகப் பணியாற்றப் போகிறேன். எனக்கென்று எந்தப் பதவியையும் நான் கட்சி மேலிடத்தில் கேட்கவில்லை. பணி செய்வதற்காகவே பா.ஜ.கவில் இணைந்துள்ளேன். காங்கிரஸில் யாரும் எந்த வேலையும் செய்வதில்லை. ஆகையால், காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பா.ஜ.கவுக்கு வர வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி ஒட்டுமொத்த உலகின் பெருமித அடையாளம். தேசத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்களோடு மக்கள் தங்களை தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். நானும் அதையே செய்யும் பொருட்டு பா.ஜ.கவில் இணைந்துள்ளேன்” என்றார். முன்னதாக ஹர்திக் படேல் வெளியிட்டுள்ள டுவிட்டா் பதிவில், ‘தேச நலன், மாநில நலன், பொதுநலன், சமூக நலன் ஆகிய உணர்வுகளுடன் இன்று முதல் புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளேன். பாரதத்தின் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கீழ் தேசத்தின் உன்னத பணிக்கு ஒரு சிறிய ராணுவ வீரனாக செயல்படுவேன். காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரை பா.ஜ.கவில் இணைக்கும் நிகழ்ச்சியை 10 நாட்களுக்கு ஒருமுறை செய்வோம். பிரதமர் மோடி ஒட்டுமொத்த உலகத்திற்கே பெருமை’ என தெரிவித்துள்ளார்.