பா.ஜ.கவில் ஹர்திக் படேல்

குஜராத்தில் கடந்த 2015ல் பதிதார் எனப்படும் படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து, கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி நடைபெற்ற போராட்டத்த்டால் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் ஹர்திக் படேல். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் ஒரு காவலர் உட்பட, 10 பேர் உயிரிழந்தனர். பிறகு கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக காங்கிரசில் இணைந்தார் ஹர்திக் படேல். அவருக்கு குஜராத் மாநில செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. எனினும், அவருக்குரிய எந்த அங்கீகாரமும் மரியாதையும் காங்கிரசில் வழங்கப்படவில்லை. இதனால் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் குழுவான ஜி 23’யில் இணைந்து காங்கிரஸ் தலைமையை விமர்சித்து வந்தார் ஹர்திக் படேல். மேலும், சமீப காலமாக பா.ஜ.க திட்டங்களை பாராட்டி பேசி வந்த இவர், கடந்த மாதம் காங்கிரசில் இருந்து விலகினார். இந்நிலையில், இன்று ஹர்திக் படேல், குஜராத் மாநில பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் ரகுநாத் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் சட்டசபைக்கான தேர்தல் இவ்வாண்டு நடக்க உள்ள சூழலில், ஹர்திக் படேலின் வருகை பா.ஜ.கவுக்கு மேலும் வலிமை சேர்க்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.