திராவிட கட்சிகளால் பட்டியல் சமூகத்தினருக்கு பாதிப்பு

திராவிட எதிர்ப்பாளர்கள் கூட்டமைப்பின் நோக்கம், செயல்பாடு, எதிர்கால திட்டங்கள் குறித்த கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏர்போர்ட் மூர்த்தி, வழக்கறிஞர் இளங்கோ, ரேவதி நாகராஜன், ராமமூர்த்தி, கவுதமன் சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது பேசிய ஏர்போர்ட் மூர்த்தி, “அம்பேத்கர் பெயரில் உள்ள 40க்கும் மேற்பட்ட இயக்கங்களை ஒருங்கிணைந்து திராவிட எதிர்ப்பாளர்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் சங்ககாலம் ஒரு பொற்காலம். ‘பாணன், பறையன், கடம்பன், துடியன் இந்நான்கல்லது குடியும் இல்லை’ (புறநானூறு. 335.7 – 8) என்னும் புறநானூறு பாடலில் இருந்து இந்த நான்கு பிரிவுகளைக் கொண்ட மக்களை வைத்து தமிழ்க்குடி வளர்ந்துள்ளது தெரிகிறது. அயோத்திதாசர், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள், பட்டியல் சமூகத்தினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வந்துள்ளனர். பட்டியல் சமூகத்தினர், பல்வேறு இதழ்களை நடத்தி மக்களுக்கு அறிவூட்டினர். ஆனால், இவர்கள் செய்த வரலாற்று புரட்சிகள் மறைக்கப்பட்டுவிட்டன. இவர்கள் பெற்றுக் கொடுத்த உரிமைகளை எல்லாம் ஏதோ தாங்களே பெற்றுக் கொடுத்ததுபோல திராவிட கட்சிகளும் இயக்கங்களும் உரிமை கொண்டாடி வருகின்றன. பட்டியல் சமூகத்தினர், பல்வேறு இதழ்களை நடத்தி மக்களுக்கு அறிவூட்டினர். ஆனால், இவையெல்லாம் பாடப்புத்தகங்களில் இடம்பெறவில்லை. நீதிக்கட்சியினரும் பட்டியல் சமூகத்தினரை உதாசீனப்படுத்தினர். பட்டியல் சமூகத்தினரின் ஆதரவாலேயே ஈ.வெ.ராமசாமி ‘பெரியார்’ ஆனார். ஆனால், இயக்கம் வளர்ந்தபிறகு பட்டியல் சமூகத்தினரின் கோரிக்கைகளை அவர் புறந்தள்ளினார். திராவிட கட்சிகளால், இயக்கங்களால் பட்டியல் சமூகத்தினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள், அவமானங்கள், உரிமை இழப்புகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது நமது கடமை. மறைக்கப்பட்ட வரலாற்றை முன்னெடுக்கவும், ஒன்றுபடுத்தி இழந்த உரிமைகளை வென்றெடுக்கவும், சமூக, பொருளாதார, அரசியல் அதிகாரத்தை பெறவும் இந்த திராவிட எதிர்ப்பு கூட்டமைப்பு தொடங்கப்படுகிறது” என கூறினார்.