ராமபிரான் அவதரித்த புனித நாளான ஸ்ரீராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த பிரதமரது டுவிட்டர் பதிவில், “ராம நவமி என்னும் புனித நாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். தியாகம், எளிமை, கட்டுப்பாடு மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பகவான் ராமச்சந்திரரின் வாழ்க்கை, அனைத்து காலகட்டத்திலும் மனித சமுதாயத்திற்கு உத்வேகமாக இருக்கும்” என வாழ்த்தியுள்ளார்.
ராம நவமியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”பகவான் ராமனின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் இந்த விழா தன்னலமற்ற சேவையை உணர்த்துகிறது. அன்பு, கருணை. மனிதநேயம் மற்றும் தியாகத்தை பின்பற்ற நம்மை தூண்டுகிறது. கண்ணியமான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கையை பகவான் ராமரின் வாழ்வு நமக்கு கற்றுக் கொடுக்கிறது. ராமரின் லட்சியங்களை உள்வாங்கி அனைத்து துறைகளிலும் பாரதத்தை சிறந்த தேசமாக உருவாக்க அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்” என்று கூறியுள்ளார்.
ராம நவமியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ராமநவமியின் இனிய தருணத்தில் நமது மக்களுக்கு அன்பான நல்வாழ்த்துகள். தேசிய அடையாளமாக திகழும் ஸ்ரீ ராமர், அனைத்து மனித மதிப்புகள் மற்றும் நற்பண்புகளின் உருவகம். அமிர்தகாலத்தில் முழுமையாக வளர்ந்த பாரதம் என்ற நமது தேசிய நோக்கத்தை நிறைவேற்ற ஸ்ரீராமர் நம்மை ஊக்குவிக்கட்டும்” என கூறியுள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “ராம நவமி திருநாளான இன்று, பகவான் ஶ்ரீராமரின் தெய்வீக அருளால், அனைவரின் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவவும், தீமைக்கு எதிரான நேர்மை மற்றும் நல்லொழுக்கம் வெல்லவும் தமிழக பா.ஜ.க சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.