வழிகாட்டும் கர்நாடகா

எவ்வித காரணமும் இன்றி சமூகத்தால் ஒதுக்கப்படுபவர்கள் திருநங்கையர். இதனால், அவர்கள் பிழைப்புக்காக, வேறு வழியே இல்லாமல் மட்டுமே பிச்சை எடுப்பது உள்ளிட்ட சில செயல்களில் ஈடுபடுகின்றனர். சமுதாயத்தில் உள்ள திருநங்கையரில் நல்ல பெயர், புகழ் அந்தஸ்தோடு இருப்பவர்கள் சொற்பமே. அவர்களுக்கும் சமுதாயத்தில் உழைத்து முன்னேற, கௌரவமாக வாழ சமமான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.

அவ்வகையில், பாரதத்தில் உள்ள மாநிலங்களில் முதன்முறையாக அவர்களுக்கு ஒரு பெரிய நிவாரணம் அளித்துள்ளது பா.ஜ.க தலைமையிலான  கர்நாடக அரசு. சமீபத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அம்மாநில அரசு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில், திருநங்கைகளுக்கு எதிராக எந்தவொரு பாகுபாடும் இருக்கக்கூடாது என்பதால் இனி அனைத்து அரசு சேவைகளிலும் திருநங்கைகளுக்காக ஒரு சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 1977ம் ஆண்டு கர்நாடக சிவில் சர்வீஸ் விதிகள் திருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம், கர்நாடக அரசின் நடவடிக்கையை வரவேற்று பாராட்டியுள்ளது.