எதிர்காலத்தில் மிகப்பெரிய மாசில்லா எரிபொருட்களில் முக்கியமானதாக விளங்கவுள்ளது ஹைட்ரஜன். இது, வாகனங்கள் முதல் மின்சார கிரிட்கள் வரை பலவற்றை செயல்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஹைட்ரஜன் தற்போது தொழில்துறையில் அம்மோனியா உற்பத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஹைட்ரஜனை மாசில்லாத பசுமை ஹைட்ரஜனாக மிகக் குறைந்த விலையில் தயாரிக்கவும் பாரதத்தை ஹைட்ரஜன் ஏற்றுமதி மையமாக மாற்றுவதையும் இலக்காக கொண்டு நமது மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பசுமை ஹைட்ரஜன் தயாரிக்க தற்போதைய உற்பத்திச் செலவுகள் சுமார் 6 டாலர்களாக இருக்கும் நிலையில், தேசத்தின் இலக்கை எட்ட, அதனை ஒரு டாலருக்கும் குறைவான செலவில் தயாரிக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கடுமையாக முயற்சித்து வருகின்றன. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி முறையுடன் அதற்கான போக்குவரத்து செயல்முறை சிக்கல்களும் இதற்கு மிகப்பெரிய தடைகளாக உள்ளன. இந்த குறைந்த உற்பத்திச் செலவு என்ற இலக்கை அடைய மிகப்பெரிய முதலீடுகளுடன் இணைந்து ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் முன்னோடித் திட்டங்கள் அவசியம். இந்த செயல்பாடுகள் வெற்றிகரமானதாக உருவாகும் பட்சத்தில், எதிர்காலத்தில் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளைச் சார்ந்து இருப்பது தவிர்க்கப்படுவதுடன், ஏராளமான அன்னிய செலவானியும் பாரதம் ஈட்டும்.