மயானக் கொள்ளை திருவிழா சிவராத்திரியை அடுத்த மாசி மாத அமாவாசையன்று தமிழகத்திலுள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. துவக்கத்தில் நான்முகனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. பார்வதி தேவி, சிவன் என்று நினைத்து வணங்கினார். இதனைக் கண்டு நகைத்ததால் பார்வதி சினமுற்று, சிவனிடம் முறையிட, பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்துவிட்டார். கொய்யப்பட்ட தலை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கி விட, உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை.
பார்வதியே நான்முகனின் நிலைக்கு காரணம் எனக் கருதிய சரஸ்வதி தேவி, பார்வதியை,”கொடிய உருவத்துடன் இடமின்றி புற்றையே வீடாக கொண்டு வாழ்வாய்!.” என சாபமிட்டாள். அதன்படி பார்வதி மலையரசனுக்கு உரிமையான ஓர் நந்தவனத்தில் தவம் இருந்தாள். காவலாளி தடுத்தும் புற்றால் தன்னை மூடிக்கொண்டு அங்காள பரமேஸ்வரியாகக் கோயில் கொண்டாள். மலையரசன் புற்றை கலைக்க முற்பட, அவன் தன் ஆற்றலை இழந்தான். இதனால் வந்திருப்பது அம்மையே என அனைவரும் அறிந்தனர்.
இக்கோயிலிற்கு சிவன் வர, அங்காள பரமேஸ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள். எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட, மகாலட்சுமியின் பரிந்துரைப்படி அம்மன் மூன்றாவது கவளத்தைக் கைதவறியதுபோல கீழே போட்டாள். உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது. பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கைகளை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள். இந்த நாளே மயானக் கொள்ளைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது.
பல இடங்களில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் வருடா வருடம் மயானக் கொள்ளை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுகிறது. சிவராத்திரியில் சிவனார் மயானம் சென்று ரௌத்திரத்துடன் நடனம் ஆடுவார். அதனை நினைவுபடுத்தும் விதமாக ஆண் பக்தர்கள் விரதம் இருந்து அம்மன் வேடம் அணிவார்கள். கோயில்களில் இருந்தே அம்மன் வேடம் அணிந்த பக்தர்கள் ஆவேசமாக நடனம் ஆடுவர். இறை ஐதீகப்படி நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் பிரார்த்தனைப்படி இல்லங்களில் சுப நிகழ்ச்சிகள் விரைவில் கூடிவரும் என்பது நம்பிக்கை. பக்தர்கள் கடவுள் வேடமிட்டபடி, மேள தாளங்கள் முழங்க மயான கொள்ளைக்கு போக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த நிகழ்வுகளை தரிசித்து இறையருள் பெற காத்திருப்பர்.
ஆர். கிருஷ்ணமூர்த்தி