ராகுலை விமர்சித்த நரசிம்மராவின் பேரன்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பாரத் ஜூடோ நடை பயணத்தின் ஒருபகுதியாக, டெல்லியில் முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, அடல் பிஹாரி வாஜ்பாய் போன்றோருக்கு அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து பேசிய முன்னாள் பிரதமர் பி.வி நரசிம்ம ராவின் பேரன் என்.வி சுபாஷ், தெலுங்கானாவில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் போது பி.வி நரசிம்ம ராவுக்கு அஞ்சலி செலுத்தாதது குறித்து வருத்தமும் கண்டனமும் தெரிவித்தார். “ஹைதராபாத்தில் உள்ள இந்திரா காந்தி சிலை அருகே நடைபெற்ற பேரணியில் ராகுல் காந்தி உரையாற்றினார். ஆனால் அங்கே உள்ள நரசிம்ம ராவின் நினைவிடத்திற்கோ அல்லது சிலை அருகிலோ ராகுல் செல்லவில்லை. டெல்லியில் உள்ள முன்னாள் பிரதமர்களின் நினைவிடங்களை ராகுல் பார்வையிட்டது, நாட்டிற்காகவும் கட்சியை வலுப்படுத்துவதற்காகவும் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த காந்தி அல்லாத மூத்த தலைவர்களை கட்சிக்கு சிறிதும் மரியாதை இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. காந்தி குடும்பம் அல்லாத பிரதமர் பி.வி நரசிம்ம ராவுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. காந்தி குடும்பத்தைச் சேராத ஒரு தலைவரின் சேவையை அக்கட்சி ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை என்பதற்கு வரலாறு ஒரு சாட்சி. பி.வி. நரசிம்மராவ் மறைவுக்குப் பிறகு கட்சி அவருக்கு மரியாதையுடன் விடையளிக்கவில்லை. 1991ல் நரசிம்மராவ் பிரதமராகவில்லை என்றால், கட்சி தனது இருப்புக்காக மிகவும் போராடியிருக்கும். சமீபத்தில் ரசிம்மராவின் 18வது நினைவு தினம் டிசம்பர் 23 அன்று அனுசரிக்கப்பட்டது. அன்று ராகுல் காந்தி அவரை பற்றி கூறவில்லை, டுவிட்டர் பதிவு கூட போடவில்லை” என கூறினார். பி.வி நரசிம்ம ராவின் பாரம்பரியத்தை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புறக்கணிக்கும் அதே வேளையில், தெலுங்கானாவை ஆளும் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சி அவரை போறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஜூன் 2020 ல் தொடங்கிய நரசிம்ம ராவின் ஒரு ஆண்டு கால பிறந்த நாள் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக நரசிம்ம ராவின் 16 அடி உயர சிலையை தெலுங்கானா முதல்வர் திறந்து வைத்தார். நரசிம்ம ராவின் மகள் எஸ்.வாணிதேவியை சட்டப் பேரவை உறுப்பினராக்கினார். ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற நெக்லஸ் சாலைக்கு பிவி நரசிம்ம ராவ் மார்க் என்று பெயரிடப்பட்டது.