கோயில்களை குறிவைக்கும் அரசு

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு, அம்மாநில ஹிந்து அறநிலையத் துறைக்கு கோயில்கள் செலுத்தவேண்டிய, நிலுவையில் உள்ள அனைத்து கட்டணங்களையும் உடனடியாக செலுத்துவதற்காக, கோயில்கள் வங்கிகளில் வைத்துள்ள நிலையான வைப்புத்தொகையை முன்கூட்டியே முறித்துக் கொள்ள வேண்டும். அந்தத் தொகையினை பயன்படுத்தி நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டும். தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

1966 ஆந்திரப் பிரதேச அறநிலையத்துறை சட்டத்தின்படி, ஆண்டுதோறும் ஐந்து லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் கோயில்கள் தங்கள் வருமானத்தில் 21.5 சதவீதத்தை அறநிலையத் துறைக்கு செலுத்த வேண்டும். 1,776 அறக்கட்டளை நிறுவனங்களில் 353.80 கோடி ரூபாய் நிலுவைத் தொகை இருப்பதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன. “இது மாநில அரசின் திட்டமிட்ட வகையிலான ஹிந்துக் கோயில்கள் மீதான தாக்குதல். கோயில்கள் வருமானம் ஈட்டும் சொத்துகளாகக் மாநில அரசால் கருதப்படுகிறது. கோயில் பணம் கோயில்களின் வளர்ச்சிக்கானது. மாநில அரசு ஏன் கோயில்களை மட்டும் குறிவைக்கிறது, மற்ற மத அமைப்புகளின் மீது தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருப்பது ஏன்? முஸ்லிம் இமாம்கள் மற்றும் கிறிஸ்தவ மத போதகர்களுக்கு அரசு நிதியில் இருந்து கெளரவ ஊதியம் வழங்கப்படுகிறது, அதேசமயம் கோயில் பூஜாரிகளுக்கான ஊதியம் கோயில்களில் வசூலான நன்கொடைகளிலிருந்து வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, ஹிந்து கோயில்களின் நிதியை முடக்கும்” என்று அம்மாநில பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.

2014 முதல் 2019 வரை ஆட்சியில் இருந்த தெலுகு தேசம் கட்சியும், 2019ல் ஆட்சிக்கு வந்த ஒய்.எஸ்.ஆர் கட்சியும் கட்டணங்களை அவ்வப்போது முறையாக வசூலிக்கத் தவறின. இப்போது அனைத்தையும் ஒட்டுமொத்தமாக தறுமாறு கேட்பது முறையல்ல. கோயில்கள், வைப்புத் தொகைகளை முன்கூட்டியே முடித்துக்கொள்ள சொல்வது சந்தேகமளிக்கிறது. கொரோனா மற்றொரு தொற்றுநோய் ஏற்பட்டால் கோயில்களைக் காப்பாற்ற யார் வருவார்கள்?  இதனை அவ்வப்போது வசூலிக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர பிராமணர் சங்கத் தலைவர் துரோணம்ராஜூ ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.