இங்கு பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.
இந்நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மணிப்பூரில் நடந்த கலவரத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த, குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹிமன்சு சேகர் தாஸ் மற்றும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி அலோகா பிரபாகர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்று உள்ளனர்.
இந்த குழு, விசாரணை துவங்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும்.