சென்னை பல்கலை துணை வேந்தரை தேர்வு செய்ய, தமிழக அரசு சார்பில் தேடுதல் குழு அமைத்து, அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பை, உயர் கல்வித் துறை செயலர் திரும்பப் பெற வேண்டும்’ என, கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பல்கலை, கோவை பாரதியார் பல்கலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை ஆகியவற்றில், துணை வேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கு துணை வேந்தரை தேர்வு செய்ய, பல்கலை சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் பெயர்களை பரிந்துரை செய்து, தேடுதல் குழு அமைக்கும்படி, கவர்னருக்கு அரசு தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், தேடுதல் குழுவில், பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., சார்பில் ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என, கவர்னர் அறிவுறுத்தினார்; இதை தமிழக அரசு ஏற்கவில்லை. இம்மாதம், 6ம் தேதி, மூன்று பல்கலைகளுக்கும், யு..ஜி.சி., தலைவர் சார்பில் ஒரு பிரதிநிதியை நியமித்து, நான்கு பேர் இடம்பெற்ற தேடுதல் குழுவை, கவர்னர் ரவி நியமித்தார்.
இதை தமிழக அரசு ஏற்க மறுத்தது. சென்னை பல்கலைக்கு, கவர்னர் ரவி அறிவித்த தேடுதல் குழுவில் இடம் பெற்றிருந்த, யு.ஜி.சி., பிரதிநிதியை நீக்கி, மற்ற மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழுவை, தமிழக அரசு புதிதாக அறிவித்தது. கவர்னர் ரவி அறிவித்த தேடுதல் குழுவில், கர்நாடகா மத்திய பல்கலை துணை வேந்தர் பட்டு சத்யநாராயணா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தீனபந்து, பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணை வேந்தர் ஜெகதீசன், யு.ஜி.சி., பிரதிநிதியாக, தெற்கு பீஹார் மத்திய பல்கலை முன்னாள் துணை வேந்தர் ரத்தோர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்களில் ரத்தோரை மட்டும் நீக்கி விட்டு, மற்ற மூவர் அடங்கிய தேடுதல் குழுவை, தமிழக அரசு அறிவித்து, தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டது. இதை திரும்பப் பெறும்படி, உயர் கல்வித் துறை செயலருக்கு, கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
கவர்னர் மாளிகை சார்பில், நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை பல்கலை வேந்தராக, கவர்னர் உள்ளார். அவர் பல்கலை துணை வேந்தரை தேர்வு செய்ய, தேடுதல் குழு அமைத்து, இம்மாதம், 6ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இது, கவர்னர் மாளிகை இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. ஆனால், தமிழக அரசின் உயர் கல்வித் துறை செயலர், யு.ஜி.சி., தலைவர் பரிந்துரையை தவிர்த்து, முறையற்ற வகையில், தேடுதல் குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, 13ம் தேதி, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது, யு.ஜி.சி., விதிமுறைகள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பு, பல்கலை வேந்தரால் வெளியிடப்படவில்லை. பல்கலை விவகாரங்களில், எந்த பங்கும் இல்லாத, உயர் கல்வித் துறை செயலரால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, உயர் கல்வித் துறை செயலர், தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.