ஆளுனர் நியமனமும் கூக்குரல்களும்

முன்னாள் ஐ.பி.எஸ் காவல்துறை அதிகாரி, உளவுத்துறைகளில் பணியாற்றி பல வடகிழக்கு மாநிலத்தில் பல இடதுசாரி பயங்கரவாத குழுக்களை அடக்கியவர், தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியவர், தற்போது நாகலாந்தின் ஆளுநராக இருப்பவர் ஆர். என் ரவி. இவரை தமிழக ஆளுநராக மத்திய அரசு சமீபத்தில் நியமித்தது. இதனையடுத்து மருந்து அடித்தவுடன் வெளியே வரும் பூச்சிகளைப்போல தமிழகத்தில் ஆளினர் நியமனத்தை எதிர்த்து ஆங்காங்கே கூக்குரல்கள் கேட்க ஆரம்பித்துள்ளன. இத்தனைக்கும் அவர் இன்னும் பதவியே ஏற்கவில்லை, அவர் என்ன செய்யப்போகிறார் என தெரியவுமில்லை. அதற்குள்ளாகவே இப்படி என்றால், இனி வருங்காலத்தில்…!?

தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் இந்த நியமனத்தை வெளியே வரவேற்று இருந்தாலும் உள்ளூர அவர் அதனை ரசிக்கவில்லை என்பதையே அவரது கூட்டணியினரின் கதறல்கள் நிரூபிக்கின்றன.

‘பொதுவாக ஆளுநர் என்பவர் மத்திய அரசின் கையாளாகத்தான் இருக்கிறார். ஒரு மாநிலத்துக்கு ஆளுநர் தேவையா என்கிற கேள்வி எழுகிறது. ஆளுநர் என்ற மத்திய அரசின் எடுபிடியை வைத்துக்கொண்டு ஒரு மாநில அரசை ஆட்டிப்படைத்து ஆளுவது என்பது பொருத்தமற்றது’ என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்.

‘தமிழகத்திற்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பவர் குறித்து பல்வேறு ஐயங்கள் எழுந்திருக்கிறது. உளவுத்துறையுடன் உறவு வைத்துள்ள ஒருவரை வேண்டுமென்றே தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. தமிழகத்திற்கு யாரை ஆளுநராக கொண்டுவந்தாலும் தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்க கூடிய அளவிற்கு தெம்பும், திராணியும் அவர்களுக்கு கிடையாது’ என கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் குரல் கொடுத்துள்ளார் திருமாவளவன்.

ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக நியமித்திருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆர்.என்.ரவியை ஆளுநராக மோடி அரசு நியமித்திருக்கிறதோ? என புலம்பியுள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி.

”பூர்வகுடிகளை ஏமாற்றியாவர் இப்போது தமிழகத்தின் ஆளுநர்!” என கவலையாக தெரிவித்துள்ளார் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்.

இப்படி இவர்கள் விடும் அறிக்கைகளை பார்த்தால், ‘மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.