ஆளுநர் அதிரடி

கேரளாவில் பல்கலைக் கழகம் ஒன்றின் பேராசிரியராக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனின் உதவியாளர் மனைவி எவ்வித தகுதியுமின்றி நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை அம்மாநில ஆளுநர் ஆரீப் முகமது கான் நிராகரித்தார். இது தொடர்பாக ஆரீப் முகமது கானுக்கும் பினராயி விஜயனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநரின் அதிகாரத்தை குறைத்து அம்மாநில அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. கண்ணுார் பல்கலைக்கழகத்தில் 2019ல் நடந்த மாநாட்டில் ஆளுநர் ஆரீப் முகமது கான் பங்கேற்க சென்றபோது அங்கிருந்த இடதுசாரி குண்டர்கள் திடீரென அவருக்கு எதிராக கோஷமிட்டு தாக்க முயன்றனர். இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன் பேசிய ஆளுநர், “இந்த விவகாரத்தில் காவல்துறை இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக் கூடாது என்று அவர்களுக்கு பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஆதாரங்களையும் சில ரகசிய கடித ஆதாரங்களையும் வெளியிடுவேன்” என கூறியிருந்தார். திருவனந்தபுரத்தில் ஆளுநர் மாளிகையில் செய்தியாளர் கூட்டத்துக்கு கவர்னர் நேற்று ஏற்பாடு செய்து சில வீடியோக்களை ஒளிபரப்பினார். மேலும், ஆளுநர் மாளிகையின் பணி நியமனங்களில் மாநில அரசு தலையிட்டது தொடர்பான அவருக்கும் அரசு தரப்புக்கும் இடையே நடந்த உரையாடல்கள் தொடர்பான ஆடியோக்களையும் வெளியிட்டார். பிறகு பேசிய அவர், “கண்ணுார் பல்கலையில் என்னை தாக்குவதற்கு சிலர் முயற்சித்தனர். அவர்களை காவலர்கள் தடுக்க முயன்றனர். அப்போது தற்போது முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரியான கே.கே.ராகேஷ் காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தார். அதிருப்தியாளர்களின் குரல்களை ஒடுக்க மாநில அரசு முயற்சிக்கிறது. பல்கலைக் கழகங்களில் ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. இதை மாநில அரசால் குறைக்கவோ தடுக்கவோ முடியாது” என கூறினார்.