கூகுள் நியூஸ், டிஸ்கவர் வலைதளங்களில் உள்ள நியூஸ் ஷோகேஸ் பகுதியில், ஜெர்மனி, கனடா, பிரேசில், பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த, 700 செய்தி நிறுவனங்களின் தலைப்புச் செய்திகள் இடம் பெறுகின்றன. இதற்காக, இந்நிறுவனங்களுடன் கூகுள் ஒப்பந்தம் செய்துள்ளது. மக்கள் இந்த செய்திப் பலகையில், தங்களுக்கு பிடித்த தலைப்பை, ‘கிளிக்’ செய்து, சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனத்தின் வலைதளத்திற்கு சென்று விரிவான செய்தியை படிக்கலாம். இந்த வசதியை, கூகுள் தற்போது பாரதத்திலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக பாரதத்தில் 30 செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல நிறுவனங்களும் இணைக்கப்பட உள்ளன. ஆங்கிலம், இந்தி மொழிகளைத் தொடர்ந்து பிராந்திய மொழிகளிலும் இச்சேவை விரைவில் அறிமுகமாக உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், 50 ஆயிரம் பத்திரிகையாளர்கள், பத்திரிகையியல் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க கூகுள் முடிவு செய்துள்ளது.