ஜம்மு காஷ்மீரில் நல்ல முன்னேற்றம்

ஜம்மு காஷ்மீர் குறித்த கேள்விக்கு மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில், “ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுடன் வலுவான பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை கட்டமைப்பை அரசு நிறுவியுள்ளது. எனவே, அங்கு பாதுகாப்பு நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளது. பயங்கரவாத சம்பவங்கள், எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள் பெருமளவுக்கு குறைந்துள்ளன” என கூறினார். எந்தெந்த ஆண்டுகளில் எவ்வளவு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், ஊடுருவல் முறியடிப்பு உள்ளிட்ட விரிவான தகவல்களையும் சமர்ப்பித்தார். மேலும், “பிரதமரின் மேம்பாட்டுத் தொகுப்பு திட்டத்தின் கீழ், ஜம்மு காஷ்மீரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 15 அமைச்சகங்களின் 53 திட்டங்கள் ரூ. 58,477 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் 25 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 28,400 கோடி ரூபாய் செலவில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களால் அங்கு வளர்ச்சியும், 4.5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என கூறிய அவர் அவற்றை பட்டியலிட்டு விளக்கினார்.