கோயிலில் அம்மன் சிலை சேதம்

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு கோயில் இடிப்பு சம்பவங்கள், சுவாமி சிலைகளை உடைப்பது, கோயிலில் திருட்டு, தீவைப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழக அரசும் காவல்துறையும் இந்த வழக்குகளில் அதிக கவனம் செலுத்தாமல் மெத்தனமாக செயல்படுகின்றன என பொதுமக்கள் பரவலாக குற்றச்சாட்டுகளை கூறிவரும் நிலையில், இதேபோல மற்றொரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. செஞ்சியில் அமைந்துள்ள ராஜகிரி கோட்டையில் பல்வேறு கோயில்கள் உள்ளது. கோயில்கள் பல இருந்தாலும் இக்கோயில்களில் பெரிய விஷேஷங்கள் ஏதும் அதிகம் நடைபெறுவதில்லை. ஆனால், இங்கு உள்ள கமலக்கண்ணி அம்மன் கோயிலில் மட்டும் தொடர்ந்து வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த கோயிலின் பூஜாரி ராமச்சந்திரன், காலையில் கோயிலுக்கு வழக்கமான பூஜைக்காக சென்றுள்ளார். அப்பொழுது கோயில் கதவுகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த அம்மன் சிலை கீழே தள்ளப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு சுவாமி சிலையை சுவற்றில் சாய்த்துவைத்து வழக்கமான பூஜைகளை செய்தார். பின்னர் அதிகாரிகள், காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் அளித்தார். இதனிடையே இதுகுறித்து அறிந்து அங்கு வந்த ஹிந்து இளைஞர்கள், கோயில் கதவை உடைத்து சுவாமி சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனகூறி போராட்டத்திலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இளைஞர்களே சமாதானப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.