உலக அளவில் சீன நிறுவன முறைகேடுகள்

பாரதத்தில் செயல்படும் சியோமி, ஓப்போ போன்ற பல சீன நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து அதன் மூலம், பல கோடி ரூபாய் ஏமாற்றியது சமீப காலமாக வருமான துறை சோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது. சீன நிறுவனங்கள் இப்படி மோசடியில் ஈடுபட்டு வருவது பாரதத்தில் மட்டுமல்ல, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என பற்பல நாடுகளிலும் இதித்தான் செய்து வருகின்றன. அமெரிக்க பங்கு சந்தையிலும் அவற்றின் முறைகேடுகள் கண்டறியப்பட்டு தடை செய்யப்படும் அளவுக்கு விஷயங்கள் விவகாரமாகியது மக்கள் அறிந்ததே. இதனிடையே சீன நிறுவனங்கள் நமது அண்டை நாடான வங்கதேசத்திலும் முறைகேடு பிரச்சனைகளில் சிக்கியுள்ளன. சீன நிறுவனங்களின் வரி மோசடி மூலம் பெரும் இழப்பினை காணும் நாடுகளில் வங்கதேசமும் ஒன்று. அந்நாட்டு அதிகாரிகள் இது போன்ற பல வழக்குகளை கண்டறிந்துள்ளனர். அதில் ஒன்றாக சீனாவை சேர்ந்த நிங்போ ஆர்ட் சப்ளைஸ் குரூப் கோ நிறுவனத்தின் துணை நிறுவனமான, கோண்டா ஆர்ட் மெட்டீரியல்ஸ் பங்களாதேஷ் என்ற நிறுவனம், சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை ‘மேட் இன் பங்களாதேஷ்’ என கூறி, உள்நாட்டு பொருட்களாகக் காட்டி மிகப்பெரியளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதற்காக, கடமை தவறிய அதிகாரிகளை தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டு முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. வங்கதேசத்தில் சீனா முதலீட்டில் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். இலங்கை போன்ற நிலையை எதிர்கொள்வதற்கு முன்பாக வங்கதேசம் சீனாவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு மோசடி செய்வதன் மூலம், தெற்காசிய நாடுகளுக்கு பெரும் இழப்பினை சீன நிறுவனங்கள் ஏற்படுத்துகின்றன என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.