காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் ஜம்மு காஷ்மீர் முதல்வரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான குலாம்நபி ஆசாத், காங்கிரசில் மீண்டும் இணைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதை மறுத்துள்ள குலாம்நபி ஆசாத், இந்த செய்தியை காங்கிரஸ் கட்சி திட்டமிட்டே பரப்பியுள்ளதாகக் கூறி காங்கிரஸை கடுமையாக சாடினார். மேலும், “நான் சொந்தமாகத் தொடங்கிய எனது கட்சியினருக்குள் நிச்சயமற்ற உணர்வை ஏற்படுத்தவும், அவர்களை மனச்சோர்வடையச் செய்யவும் காங்கிரஸ் தலைவர்கள் இந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். நான் மீண்டும் காங்கிரஸில் சேர்வது குறித்து ஏ.என்.ஐ செய்தியாளர் பதிவு செய்த கதையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். துரதிர்ஷ்டவசமாக காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு பிரிவு தலைவர்களால் இதுபோன்ற கதைகள் விதைக்கப்படுகின்றன. காங்கிரஸ் கட்சி மீதும், அதன் தலைமை மீதும் எனக்கு எந்தத் கெட்ட எண்ணமும் இல்லை. எனினும், இந்தக் கதையை திட்டமிட்டு பரப்புபவர்கள் அவ்வாறு செய்வதைத் தவிர்க்கும்படி அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கதை முற்றிலும் ஆதாரமற்றது என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறேன்” என தெரிவித்தார்.