குலாம் நபி ஆசாத் வேதனை

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து, அதற்கான கடிதத்தை கட்சி தலைவர் சோனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.அந்த கடிதத்தில், “கடந்த 2013ல் காங்கிரசின் துணைத் தலைவரான பின்பு, கட்சியின் கலந்தாலோசனை முறையை ராகுல் முற்றிலும் அழித்துவிட்டார். அவரின் குழந்தைத்தனமான நடவடிக்கைளே 2014 தேர்தல் தோல்விக்கு காரணம். 2014 முதல் 2022 வரை நடந்த 49 சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில் 39 தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது. 4 தேர்தல்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 6 மாநிலங்களில் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்கிறது. 2 மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடத்துகிறது. கட்சியில் மறுசீரமைக்க உங்களுக்கு கடிதம் எழுதிய முன்னாள் மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் மீது உங்களின் துதிபாடிகள் தாக்கியதுடன் கொச்சைப்படுத்தினர். காஷ்மீரில் எனக்கு போலியான இறுதி ஊர்வலத்தை நடத்தினர். அந்த கும்பல் கபில் சிபல் வீட்டையும் தாக்கியது.  எங்கள் கருத்துகளை ஆக்கப்பூர்வமானதாக எடுத்து கொள்ளாமல், சிறப்பு செயற்குழு கூட்டம் எங்களை வசைபாடியது. காங்கிரஸ் கட்சியில் ராகுல் மேற்கொண்ட அத்தனை சோதனை முயற்சிகளும் படுதோல்வி அடைந்துவிட்டன. துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை திரும்பி வரமுடியாத நிலையை எட்டியுள்ளது. இப்போது கட்சியின் தலைமைப் பதவியை கைப்பற்ற பினாமிகள் முட்டுக் கொடுக்கப்படுகிறார்கள். இந்தச் சோதனை முயற்சியும் தோல்வியடையும், ஏனென்றால் கட்சி முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது அதனை மீட்க முடியாது. இது எல்லாவற்றுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக உள்ள பொறுப்பற்ற தலைமையே காரணம். கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் கேலிக்கூத்தானது மற்றும் ஏமாற்றுவேலை. எந்த இடத்திலும், எந்த மட்டத்திலும் தேர்தல் நடத்தவில்லை. கட்சியில் நடக்கும் மிகப்பெரிய மோசடிக்கு கட்சியின் தலைமையே பொறுப்பேற்க வேண்டும். இதற்காகவா முன்பிருந்த தலைவர்கள் பாடுபட்டார்கள்? மிகுந்த மனவேதனையுடன் கட்சியில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுகிறேன்” என்று கூறியுள்ளார்.