உங்கள் தலைவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நாடாளுமன்றத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை கௌரவிக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ‘உங்கள் தலைவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்’ என்ற திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இளைஞர்களுடன் சகஜமாக உரையாடிய பிரதமர், நேதாஜியின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் குறித்தும், அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் விவாதித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமைகள், தங்கள் வாழ்வில் எதிர்கொண்ட சவால்களை எவ்வாறு கடந்து வந்தனர் என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக அவர்களின் சுயசரிதையை வாசிக்குமாறு அறிவுரை வழங்கினார். பிரதமரைச் சந்திக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றதற்கான தங்களது மகிழ்ச்சியை இளைஞர்கள் வெளிப்படுத்தினார்கள். நாடாளுமன்றத்தில் தேசிய தலைவர்களுக்கு பிரமுகர்கள் மட்டுமே மலர் அஞ்சலி செலுத்தி வந்த வழக்கத்தை மாற்றி நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் நேதாஜி சுபாஷ் சந்திர போசை கௌரவிப்பதற்காக, தீக்ஷா தளம் மற்றும் மை கவ் தளத்தில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டி, மாவட்ட மற்றும் மாநில அளவுகளில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகளின் மூலம், தகுதியின் அடிப்படையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த 80 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நாடாளுமன்றத்தில் நேதாஜிக்கு மலர் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் உரையாற்ற 31 இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், மராத்தி மற்றும் வங்கம் ஆகிய ஐந்து மொழிகளில் அவர்கள் பேசினார்கள்.