கங்கா உத்சவ் நதிகள் திருவிழா

‘கங்கா உத்சவ்’ என்ற பெயரில் ‘நதிகள் திருவிழா 2022’ நேற்று டெல்லியில் கொண்டாடப்பட்டது. மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் தூய்மை கங்கை தேசிய இயக்கத்தின் சார்பில் மேஜர் தயான்சந்த் அரங்கத்தில் இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற இந்த விழாவில் காலை அமர்வில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய இணையமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு ஆகியோர் பங்கேற்றனர். மாலையில் நடந்த அமர்வில் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை வகித்தார். கங்கை தூய்மைக்காக அதிக நிதி வழங்கியவர்கள், ஜல்சக்தித் துறை அமைச்சரால் கௌரவிக்கப்பட்டார்கள். கங்கை உத்சவ் 2022ன் ஒரு பகுதியாக உணவுத் திருவிழா, நதிகள் தூய்மை தொடர்பான படம் திரையிடல், தகவல் விளக்க அமர்வு, கலை, கலாச்சாரம், கதை சொல்லல், கலந்துரையாடல், இசை, நடனம் உள்ளிட்டவற்றின் கலவையாக இந்த கங்கை உத்சவ் நடைபெற்றது. இந்த திருவிழா நடைபெறும் அதே நேரத்தில் நாடு முழுவதும் கங்கை நதிக்கரைகள் உள்ள 75 இடங்களிலும் இதுதொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கங்கை உத்சவ் நதி திருவிழா 2022’ன் மூலம் நதிகள் புனரமைப்பில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் பங்களிப்பை தேசிய தூய்மை கங்கை இயக்கம் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்கிறது. நதிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், நதிகள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கிலும் கங்கை உத்சவ் 2022 கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு செயல்பாடுகள் இடம்பெறுகின்றன. நதிகள் உடனான இணைப்பை வலுப்படுத்த ஆர்த்தி கங்கா திட்டத்தில் கவனம் செலுத்தப்படும். கங்கை உத்சவ் நிகழ்ச்சியில் மாவட்ட கங்கை குழுக்கள் தீவிரமாக பங்கேற்பது உறுதி செய்யப்படும்.