கர்நாடக மாநிலம், ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே சிக்கமுதுவாடி தாண்டா கிராமத்தில் வசித்து வரும் மக்கள் சிலரை ஒரு கிறிஸ்தவ மதமாற்ற கும்பல் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி செய்வதாகவும், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கிராமத்தில் ஒரு வீட்டில் தங்கி இருப்பதாகவும் கனகபுரா காவல்நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிக்கமுதுவாடி தாண்டா கிராமத்திற்கு சென்ற காவல்துறையினர், ஒரு வீட்டில் இருந்த 12 பேர் கொண்ட கிறிஸ்தவ மதமாற்ற கும்பலை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் மத மாற்ற முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 12 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது மத மாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மத மாற்ற தடை சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தின் படி, மத மாற்ற முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் கிறிஸ்தவ மிஷனரிகள் கட்டாய மதமாற்றம் செய்வதாக ஹிந்து ஆர்வலர்கள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றனர். முன்னதாக, கனகபுரா தாலுகாவில் உள்ள கபாலபெட்டாவில் உலகின் மிக உயரமான இயேசுவின் சிலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை கவர்வதற்காக, தனது தொகுதியில் இந்த சிலையை கட்டுவதற்கு ஆதரவு அளித்தார். அப்போது பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் கபாலபெட்டாவில் இயேசு கிறிஸ்துவின் சிலையைக் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. அதன்பின்னர் கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்ததுடன், அனுமதியின்றி எந்தப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்தது நினைவு கூரத்தக்கது.