குணங்களைக் கற்பிக்கும் விளையாட்டுகள்!

பள்ளி ஆண்டு விழாவில் எந்தப் போட்டியில் பங்கேற்பது என்ற யோசித்துக் கொண்டிருந்தாள் மலர்விழி. ஆண்டு விழாவில் பேச்சுப் போட்டி, பாட்டு போட்டி, கட்டுரை போட்டி என பலவிதமான போட்டிகள் நடைபெறுவதாகவும், விருப்பமான போட்டிகளில் கலந்துக்
கொண்டு அவரவர் திறமையை வெளிப்படுத்தவேண்டும் என்றும் வகுப்பு ஆசிரியை கூறியிருந்தார்.

தனது கையெழுத்து அழகாக இருக்கும் என்பதால், கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு தன் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தாள் மலர்விழி. ஆனால் கட்டுரை போட்டியின் தலைப்பைப் பார்த்ததும் சோர்வடைந்து விட்டாள். ‘பாரம்பரிய விளையாட்டு அதன் பயன்களும்’ என்பதுதான் தலைப்பு. பாரம்பரிய விளையாட்டு என்றால் எதுவென்றே தெரியாது அவளுக்கு. இதில் நாம்எவ்வாறு கலந்து கொண்டு நம் திறமையைவெளிப்படுத்த முடியும் என்று நினைத்தவாறே பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றாள்.

பள்ளிப் பையைக் கழற்றி வைத்துவிட்டு முகம், கை, கால் கழுவி விட்டு, தன் பாட்டியிடம் சென்று உட்கார்ந்தாள். பாட்டி, அவளின் முகத்தைப் பார்த்து, “என்னாச்சு மலர்விழி… முகம் வாடியிருக்கிறதே” என்று கேட்டார்.அதற்கு மலர்விழி, “ஆண்டு விழா கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் அந்தத் தலைப்பில் எனக்கு எதுவும் தெரியாததால் கலந்து கொள்ள முடியாது என்று வருத்தத்துடன் கூறினாள்.

அதற்கு பாட்டி, “இதற்காகவா இப்படி இருக்கின்றாய்” என்று சிரித்துவிட்டு, “உனக்கு பாரம்பரிய விளையாட்டு பற்றியும், அதன் பயன்கள் பற்றியும் விளக்கிக் கூறுகிறேன்” என்றார்.உடனே மலர்விழி, “என்ன சொல்றே பாட்டி, உனக்கு தெரியுமா” என்று கேட்டாள். உடனே பாட்டி, “நாங்கள் சிறுவயதில் விளையாடாத விளையாட்டா?” என்று சிரித்த பாட்டி, மலர்விழியின் தலையை வருடிய
படியே பேசத் தொடங்கினார்.

“தொழில்நுட்பம் நம்மை வசப்படுத்தும் முன்பு கோடைகாலத்தில் நாங்கள் விளை யாடிய விளையாட்டுகள் இன்று கனவாகி போகிவிட்டது. விடுமுறை நாட்களில் நாங்கள் வீட்டின் திண்ணையில் விளையாடும் விளையாட்டுகள் இன்று உங்கள் கையால் இருக்கும் ஸ்மார்ட் போனில் வந்து விட்டது. தெருக்களில் விளையாடிய காலம் மாறி இன்று தெருக்களும் வெறிச்சோடி கிடக்கின்றன. அப்படி மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் பற்றிதான் உனக்கு விளக்கப் போகிறேன்” என்றார்.

“நாங்கள் பல்லாங்குழி, பரமபதம், கிள்ளி, சதுரங்கம், நொண்டி, கண்ணாம்பூச்சி என பல விளையாட்டுகளை விளையாடினோம்” என்று பெருமூச்சு விட்ட பாட்டி, அந்த விளையாட்டுகளைப் பற்றி மலர்விழிக்குக் கூறத் தொடங்கினார்.

பல்லாங்குழி
பல்லாங்குழி என்பது இருக்கும் இடத்தில் இருந்து இல்லாத இடத்திற்கு கொடுப்பது. இதனால் நமக்கு இல்லாதவர்களுக்கு கொடுக் கின்ற குணம் வளரும்.

பரமபதம்
ஏற்றம், இறக்கம் இரண்டும் இருப்பதே வாழ்க்கை என்பதை நமக்கு உணர்த்தும்.

கில்லி
கூட்டல், பெருக்கல் கணக்கை கழிப்புடன் மகிழ்ந்து கற்க கில்லி உதவும்,

தாயம்
வெட்டி வெளியே இருந்தாலும் மீண்டும் முயன்று முன்னேறும் இந்த விளையாட்டை விளையாடுவதால் நாம் குடும்பத்துடன் ஒருங்கிணைந்திருப்போம்.

சதுரங்கம்
இதர வழி இல்லாதபோதும் இறுதிவரை போராடும் உறுதி மனம் பெறும்.

நொண்டி
சமமாக இல்லாதபோதும் சாதிக்கத் தூண்டும் சக்தியை கொடுக்கும்.

கண்ணாம்பூச்சி
ஒளிந்து இருப்பவர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பையும் தானே ஒளிந்து மகிழ்ந் திருக்கும் பொருளையும் பெறும். இப்படி ஒவ்வொரு விளையாட்டும் நல்ல வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களை நமக்கு கற்றுக்கொடுக்கும்” என்று நிறுத்தினாள் பாட்டி. இதை கேட்டுக் கொண்டிருந்த மலர்விழி, “நீ சொன்னதையெல்லாம் கட்டுரை போட்டியில் எழுதி முதல் பரிசு வாங்குவேன் பாட்டி” கூறிவிட்டு, “நானும் என் தோழிகளும் இனிமேல் பாரம்பரிய விளையாட்டு களையே விளையாடி நல்ல குணங்களை பெறுவோம்” என்றபடி, அந்த இடத்தை விட்டு எழுந்தாள். பேத்தி செல்வதை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பாட்டி.