தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிறுவனத்துடன் தி.மு.கவின் பல முக்கியப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த சூழலில், ஒரே நேரத்தில் அதிக அளவு நிலங்களைக் கையகப்படுத்தியது, குறைந்த காலக்கட்டத்தில் அதிக வருமானம் ஈட்டியது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நேற்று நடைபெற்றது. சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை, ஆழ்வார்பேட்டை, திருச்சி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினரின் சோதனை நடத்தினர். இதேபோல, கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, தங்கள் நிறுவனம் மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டுகளால் பல ஆண்டு உழைப்பில் பெறப்பட்ட தமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளதாகவும் ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது.