ஜி-20 மாநாடு முழு வெற்றி; அமெரிக்கா பாராட்டு

‘ஜி – 20’ மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதையும், அதற்கு காரணமான பிரதமர் நரேந்திர மோடியின் தீர்க்கமான தலைமைப் பண்பையும், மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, பா.ஜ., முடிவு செய்துள்ளது. இது போல் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் இம்மாநாட்டு வெற்றிகரமாக முடிந்துள்ளதாக பாராட்டியுள்ளன. அமெரிக்க செய்திதொடர்பாளர் மாத்யூமில்லர் ஒரு அறிக்கையில் பிரதமர் மோடியையும் மாநாடு நடத்தி எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் பாராட்டியுள்ளார். கடந்த, 9 மற்றும் 10ம் தேதிகளில், ‘ஜி – 20’ உச்சி மாநாடு புதுடில்லியில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரையும், ஒருசேர வரவழைத்து, முதன்முறையாக இவ்வளவு பெரிய சர்வதேச மாநாட்டை நடத்தி முடித்ததில், பா.ஜ., மூத்த தலைவர்கள் மிகப்பெரிய உற்சாகத்தில் உள்ளனர். இந்தியாவின் பெருமை மற்றும் முக்கியத்துவம், உலக நாடுகள் மத்தியில் கவனிக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது, மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட பா.ஜ., மேலிட நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளில் இறங்க, பா.ஜ., மேலிடம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ‘உலகத்திற்கே வழிகாட்டியாக இந்தியாவை மாற்றியவர் பிரதமர் நரேந்திர மோடி’ என்ற கருத்துருவாக்கமும், ‘விஸ்வகுரு மோடி’ என்ற முழக்கமும் செய்ய முடிவெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் உலக நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கையில், இந்தியாவின் தனிச்சிறப்பும், தலைமைத்துவமும் இந்த, ‘ஜி – 20’ மாநாடு வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் பாராட்டி கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.

குறிப்பாக அமெரிக்காவின், ‘வாஷிங்டன் போஸ்ட்’ துபாயிலிருந்து வெளிவரும், ‘கல்ப் போஸ்ட்’ ஆஸ்திரேலியாவின், ‘ஏபிசி நியூஸ்’ போன்ற ஊடகங்கள், இந்த மாநாடு, 100 சதவீத வெற்றியடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டுஉள்ளன. எனவே, இந்த சாதனையை, வரும் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலின்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், அதற்கேற்ப நிகழ்ச்சிகளை வடிவமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் பா.ஜ., மேலிடத்திலிருந்து அறிவுறுத்தல்கள் வரத் துவங்கியுள்ளன.

மேலும், அனைத்து நிகழ்ச்சிகள், பிரசார நடவடிக்கைகளில், ‘ஜி – 20’ குறித்த குறிப்புகளும், பிரதமரின் தலைமைப் பண்புக்கு கிடைத்த மாபெரும் கவுரவம் குறித்த தகவல்களும் இடம் பெற வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ‘ஜி – 20’ மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்து, தன் தலைமைப் பண்பை உலக நாடுகள் மத்தியில் திறம்பட நிரூபித்துக் காட்டியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கும் வகையில் பார்லி.,யில் தீர்மானம் கொண்டு வரப்படஉள்ளது.