பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, பயிற்சி, சட்டவிரோத பணப் பரிமாற்றம், வெளிநாட்டு நிதி முறைகேடுகள் சம்பந்தமாக, நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பு மற்றும் அதன் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத் துறையால் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின, பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் நேற்று திடீர் முழு அடைப்பு போராட்டத்திற்கு பி.எப்.ஐ அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். இந்த முழு அடைப்பை மீறி வாகனங்களை இயக்கியவர்கள் மீது கொல்லம், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடூர தாக்குதல்களை பி.எப்.ஐ அமைப்பினர் நடத்தினர். சில இடங்களில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு, கற்கள் எரிந்து தாக்குதல் போன்றவையும் நடைபெற்றன. இதனால் கேராளாவெங்கும் பரபரப்பு ஏற்பட்டது. கேரள அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணமாக ஹெல்மெட் அணிந்தபடி டிரைவர்கள் பஸ்சை இயக்கினர். இதனையடுத்து கோவையில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பல தமிழக பேருந்துகள் இயக்கப்படவில்லை. கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் கேரள மாநில அரசு பேருந்துகள் பலவும் இயக்கப்படவில்லை. இந்த திடீர் பந்த் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனர். சில பல்கலைக் கழகங்களும் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், பி.எப்.ஐ அமைப்பின் அடாவடி பந்திற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. அப்போது, ‛பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை நடக்கிறது. அரசு சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்படுகிறது. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதை ஏற்க முடியாது. அனைத்து விதமான சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்தி, வன்முறை எந்த வடிவில் வந்தாலும் அதை மாநிலஅரசு தடுக்க வேண்டும்’ என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.