சென்னை, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஃப்ரெஷ் ஒர்க்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. சுமார் 1.13 பில்லியன் டாலர்கள் நிதி திரட்ட, 2.85 கோடி பங்குகள் வெளியிடப்பட்டன.
கடந்த புதன்கிழமை வர்த்தகமாகத் தொடங்கிய அன்றே சக்கை போடு போட்டுள்ளது இந்நிறுவன பங்குகள். முதல் நாளன்றே 32 சதவீதம் உயர்ந்து, நிறுவனத்திற்கும், பங்குகளை வாங்கியவர்களுக்கும், இதர முதலீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தைத் தந்திருக்கிறது. கடந்த 2010ல் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட ஃப்ரஷ் ஒர்க்ஸ் சாப்ட்வேர் சர்வீஸ் நிறுவனத்தின் முதல் நிலைச் சந்தை, அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் 23ம்தேதி பட்டியலிடப்பட்டதை இந்தியப் பங்குச் சந்தை நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், வங்கிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
பாரதத்தின் சாப்ட்வேர் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, நாஸ்டாக் சந்தையில் பட்டியலிடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து இந்நிறுவனத்தில் பல ஊழியர்கள் உட்பட பல புதிய கோடீஸ்வரர்களை ஃபிரஷ் ஒர்க்ஸ் உருவாக்கியுள்ளது. எங்கள் கனவு இன்று நிறைவேறியுள்ளது, இதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் இந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கிரிஷ் மாத்ருபூதம்.