வாரணாசியில் உள்ள சிவன் கோயில் 3,000 சதுர அடி என்ற மிகச் சிறிய அளவில் இருந்தது. பல்வேறு சிறப்புக்களுடன் அதனை பிரம்மாண்டமாக விரிவாக்க வாரணாசி தொகுதியின் மக்களவை உறுப்பினரும் பிரதமருமான மோடி திட்டமிட்டார். அதன்படி நேற்று கங்கை கரையுடன் கோயிலை நேரடியாக இணைக்கும் நடைபாதை, அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்கும் இடங்கள், அரங்குகள், உணவு கூடங்கள் உள்பட 23 புதிய கட்டிடங்கள், புதுப்பிக்கப்பட்ட சிறிய கோயில்கள் கொண்ட வளாகம் பிரதமரால் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இதனையொட்டி காசி நகரமே விழாக்கோலம் பூண்டது. முன்னதாக, காலபைரவர் கோயிலில் வழிபாடு செய்த மோடி, பின்னர், கங்கை நதியில் புனித நீராடி இறைவனை வழிபட்டார். இக்கோயில் கட்டுமானத் தொழிலாளர்களுடன் உணவு உண்டு, அவர்கள் மீது பூக்களை தூவி தனது நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தினார். “இன்று, இந்த பிரமாண்ட வளாகத்தின் கட்டுமானத்திற்காக உழைத்த ஒவ்வொரு தொழிலாளிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா காலத்திலும், பணிகள் நிற்காமல் நடைபெற்றன. காசியின் வளர்ச்சி ஈடு இணையில்லா எண்ணற்ற நல்லொழுக்க ஆத்மாக்களின் ஆற்றலை உள்ளடக்கியது. அதனால்தான் மதம், இனம், மொழி கடந்து பல தரப்பில் இருந்தும் மக்கள் இங்கு வருகிறார்கள். உண்மை, அஹிம்சையின் அடையாளமான காசி புதிய ஒளி பெற்றுள்ளது’ என கூறினார்.