பாரதத்தைப் பற்றியும் அதன் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றியும் பொய்களைப் பரப்பும் வகையில் நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு செய்தி ஊடகங்களை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக மார்ச் 8 அன்று நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியிடப்பட்ட, ‘பாரதத்தின் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான மோடியின் இறுதித் தாக்குதல் தொடங்கியது’ என்ற தலைப்பில், ‘தி காஷ்மீர் டைம்ஸ்’ நிர்வாக ஆசிரியர் அனுராதா பாசின் எழுதிய கட்டுரையில், சுதந்திரத்தின் நிலை குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளார். பாரதத்தில் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களை பிரதமர் மோடி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனை கண்டித்து அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ள தொடர் டுவிட்டர் பதிவுகளில், “சில வெளிநாட்டு ஊடகங்கள் பாரதம் மற்றும் பிரதமர் மோடி மீது வெறுப்பைக் கொண்டுள்ளன. நமது ஜனநாயகம் மற்றும் ப்ளூரிடிக் சமூகம் குறித்து நீண்ட காலமாக திட்டமிட்ட முறையில் பொய்களை பரப்ப முயற்சிக்கின்றன. நியூயார்க் டைம்ஸ், பாரதத்தைப் பற்றி எதையும் வெளியிடும்போது அதன் நடுநிலைமையை நீண்ட காலத்திற்கு முன்பே கைவிட்டுவிட்டது. காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரம் பற்றிய அந்த பத்திரிகையின் கருத்துப் பகுதி, பாரதம் மற்றும் அதன் ஜனநாயக அமைப்புகளைப் பற்றிய தவறான மற்றும் கற்பனையான பிரச்சாரத்தை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் மற்றும் வேறு சில இணை எண்ணம் கொண்ட வெளிநாட்டு ஊடகங்கள், பாரதம் மற்றும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி பற்றி பொய்களை தொடர்ந்து பரப்பி வருகின்றன. வெறுப்பை வளர்க்கும் வகையில் பொய்களைப் பரப்புவதற்கு நீண்ட காலமாக திட்டமிட்டு முயற்சித்து வருகின்றன. இதுபோன்ற பொய்கள் நீண்ட காலம் நீடிக்க முடியாது. பாரதத்தில் பத்திரிகை சுதந்திரம் என்பது மற்ற அடிப்படை உரிமைகளைப் போலவே புனிதமானது. பாரதத்தில் ஜனநாயகம் மற்றும் மக்களாகிய நாமும் மிகவும் முதிர்ச்சியடைந்துள்ளோம். இதுபோன்ற நிகழ்ச்சி நிரல் சார்ந்த ஊடகங்களிலிருந்து ஜனநாயகத்தின் இலக்கணத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. காஷ்மீரில் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக நியூயார்க் டைம்ஸ் பரப்பும் அப்பட்டமான பொய்கள் கண்டிக்கத்தக்கது” என்றார்.