சரைகாட் என்ற இடத்தில் நடைபெற்ற மாபெரும் போரில், வலிமைமிக்க முகலாயர்களை தோற்கடித்த கிழக்கு இந்தியாவின் தலைசிறந்த போர்வீரர்களில் ஒருவரான அஹோம் ஜெனரல் லச்சித் பர்புகானின் 400வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் டெல்லியில் நடைபெற உள்ளன. அவரது வாழ்க்கையை விளக்கும் வகையில் விஞ்ஞான் பவனில் இரண்டு நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் இதுவரை அறியப்படாத மாபெரும் போர்வீரரை தேசிய வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் நிறைவு விழாவை நடத்த அசாம் அரசு திட்டமிட்டுள்ளது. நவம்பர் 23 மற்றும் 24ம் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாட்டினை அசாம் அரசு செய்து வருகிறது. முன்னதாக பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி அசாமின் குவஹாத்தியில் உள்ள ஸ்ரீமந்தா சங்கர்தேவ் கலாக்ஷேத்ராவில் லச்சித் பர்புகானின் 400வது ஆண்டு விழாவைத் தொடங்கி வைத்தார் என்பது நினைவு கூரத்தக்கது.