புதுமையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், கட்டணம் இல்லாமல் கணிதம் மூலம் ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ என்ற பாடத்திட்டத்தை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி மெட்ராஸ்) அறிமுகப்படுத்த உள்ளது. 10 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படியொரு முயற்சி நாட்டிலேயே முதல் முறையாகும். ஐ.ஐ.டி மெட்ராஸ் ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன், ஐ.ஐ.டி மெட்ராசின் செக்.8 கம்பெனி மூலம் கட்டணமின்றி ஆன்லைனில் இந்தப் பாடத்திட்டம் கற்பிக்கப்படுவதுடன் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கிரேடு சான்றிதழும் வழங்கப்படும். தேர்வுக்கு குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரதம் முழுவதும் குறிப்பிட்ட நகரங்களில் உள்ள மையங்களில் இறுதித் தேர்வு நடத்தப்படும். பாரதத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைவருக்கும் ஆன்லைன் முறையில் இலவசமாகப் பாடத்திட்டம் கிடைக்கும். நான்கு நிலைகளாக நடைபெற உள்ள இந்தப் பாடத்திட்டம் மாணவர்கள், பயிற்றுனர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எளிதில் அணுகக் கூடியதாக இருக்கும். பாடத்திட்டத்தின் முதலாவது பேட்ச் ஜூலை 1, 2022 அன்று தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு 24 ஜூன் 2022 அன்று நிறைவடையும். ஆர்வமுள்ளவர்கள் https://www.pravartak.org.in/out-of-box-thinking.html என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். கணிதக் கல்வியாளரும், ஆர்யபட்டா கணித அறிவியல் கல்வி நிறுவனத்தின் நிறுவனர், இயக்குனரான சடகோபன் ராஜேஷ், இந்த பாடத்திட்டங்களைக் கற்றுக் கொடுக்க உள்ளார். பள்ளி முதல் கல்லூரி வரை பல்வேறு நிலைகளில் படிக்கும் 10 வயதிற்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கடந்த 30 ஆண்டுகளாக இவர் கணிதப் பாடத்தைக் கற்பித்து வருகிறார்.