மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷனின் கீழ் 4.17 கோடிக்கும் அதிகமான கிராமப்புற வீடுகளுக்கு புதிய குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த பணியை 2019 ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். சுதந்திரம் அடைந்த காலம் முதல் இந்த அறிவிப்பு வெளியாகும் காலகட்டம்வரை சுமார் 3.23 கோடி கிராமப்புற குடும்பங்கள் மட்டுமே குடிநீர் குழாய் நீர் இணைப்புகளை பெற்றிருந்தன. ஆனால், தற்போது இந்த திட்டத்தின் கீழ் 7.41 கோடிக்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்கள் தங்கள் வீடுகளில் குழாய் நீரை பெற்று வருகின்றனர். மிகக்குறுகிய காலகட்டத்தில் நான்கு கோடிக்கும் அதிகமான வீடுகள் தற்போது குடிநீர் இணைப்பை இலவசமாக பெற்றுள்ளது என்பது ஒரு வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.