பா.ஜ.க.வின் 44வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கட்சிக் கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சமீபத்தில் டெல்லியில், புதிதாக விரிவாக்கம் செய்து கட்டப்பட்ட பா.ஜ.க. மத்திய அலுவலக திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்து வைத்தார். பின்னர், பா.ஜ.க நிறுவன தினத்தையொட்டி கட்சி தொண்டர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார்.
ஹனுமன் பா.ஜ.க ஒற்றுமை: அப்போது அவர் “இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டிய நாள். ஹனுமன் ஜெயந்தி கொண்டாடும் இந்த நன்நாளில் நாம் பா.ஜ.க.வின் நிறுவன தினத்தை கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். ஹனுமன் ஒரு தியாகி. ஹனுமனுக்கும் பா.ஜ.கவுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. மற்றவர்களுக்காக ஹனுமன் எதையும் செய்ய வல்லவர். ஆனால், அவர் தனக்காக எதையும் செய்துகொள்ளாதவர். இந்த இயல்புதான் பா.ஜ.கவை இயக்கிக் கொண்டிருக்கிறது. ஹனுமன் தனது சக்தியை உணர்ந்து கொண்டது போல பாரதம் தற்போது அதன் சக்தியை உணர்ந்து கொண்டிருக்கிறது. ஊழலுக்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் தேவையான உந்துதலை பா.ஜ.க ஹனுமனிடம் இருந்து பெறுகிறது. ஹனுமனின் முழு வாழ்க்கையையும் பார்த்தால், ‘நம்மால் முடியும்’ என்ற எண்ணம்தான் அவரது அனைத்து வெற்றிக்கும் காரணமாக இருந்துள்ளது. பா.ஜ.கவினர் ஒவ்வொருவருக்கும் ஹனுமனின் ஆசி கிடைக்க பிரார்த்திக்கிறேன். பா.ஜ.கவின் இந்த நிறுவன நாளில், தாய்நாட்டின் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போல் நாமும் நமது தேசத்திற்காக உழைக்க வேண்டும். ஹனுமன் போல, பா.ஜக பிரதிபலன் பார்க்காமல் தேசத்துக்காக உழைத்து வருகிறது.
தேசத்தின் வளர்ச்சியே முக்கியம்: பாரதம், இப்போது எந்தவொரு சவாலையும் சந்திக்க தயாராக உள்ளது. 1984ம் ஆண்டில் 2 மக்களவை தொகுதிகளுடன் தொடங்கிய கட்சியின் பயணம், பின்னர் 201-ம் ஆண்டில் 303 தொகுதிகளாக அதன் வெற்றி அமைந்துள்ளது. அது எண்ணம் மற்றும் கருத்துகளின் விரிவாக்கத்திற்கான ஊக்கமளிக்கும் பயணம் ஆக இருந்துள்ளது. இது ஒரு கட்டடத்தின் விரிவாக்கம் மட்டுமல்ல, இது ஒவ்வொரு தொண்டரின் எண்ணங்களின் விரிவாக்கமும் கூட தான். கோடிக்கணக்கான தொண்டர்கள் மற்றும் கட்சியின் நிறுவன உறுப்பினர்களின் முன் தலை வணங்குகிறேன் 2014 முதல் பாரதம் புதிய உத்வேகத்துடன் வேகமாக முன்னேறி வருகிறது. பாரதத்தின் வளர்ச்சியே பா.ஜ.கவின் தாரக மந்திரம். தேசத்தின் வளர்ச்சியே எங்களின் முக்கிய நோக்கம். ஓட்டு வங்கி அரசியலை பா.ஜ.க ஒருபோதும் விரும்புவதில்லை. சமூகநீதியே எங்களுக்கு முக்கியம். எதிர்கட்சிகள் சமூகநீதியை காப்பதுபோல் நாடகம் ஆடுகின்றன. காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியல், இன வேறுபாடு வளர்த்தல் என்பதை தொடர்ந்து பின்பற்றி வருகிறது. ஏழைகளையும், பழங்குடி சமூக மக்களையும் காங்கிரஸ் இழிவாக பார்க்கிறது. எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லாதவை. அக்கட்சிகளால் யாருக்கும் பயன் கிடைக்காது. என்னை வீழ்த்த எதிர்கட்சிகள் பொய்களை சொல்கின்றன. பா.ஜ.கவை குறித்து தவறான பிரசாரத்தை அவை மேற்கொண்டு வருகின்றன. என்னை குழி தோண்டி புதைப்பதையே எதிர்ட்சிகள் எப்போதும் சிந்தித்து வருகின்றன. ஆனால் மக்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
உண்மையான சமூகநீதி: எதிர்க்கட்சிகளால் பெரிதாக சிந்திக்க முடியவில்லை. சிறிய அளவிலான இலக்குகளையே நிர்ணயித்து அதிலேயே அவை திருப்தி அடைந்து விடுகின்றன. மிகப் பெரிய கனவுகளைக் காண்பதிலும், மிகப் பெரிய இலக்குகளை அடைவதிலும் பா.ஜ.க நம்பிக்கை கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்படும் என எதிர்க்கட்சிகள் ஒருபோதும் எண்ணியதில்லை. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, 370வது சட்ட பிரிவு குறித்து எதிர்கட்சியினர் தவறான பிரசாரம் செய்தனர். எதிர்கட்சிகளின் சதியும், பொய் பிரசாரமும் எடுபடாது. ஏழைகளுக்கு கழிப்பறை, இலவச வீடுகளை நாம் கட்டிக்கொடுத்து உள்ளோம். தேசம் முழுவதும் 80 கோடிக்கும் அதிகமானோருக்கு இலவச ரேஷன் பொருட்கள் கொடுத்துள்ளோம். சுகாதார காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தான் உண்மையான சமூகநீதி. நாம் அனைத்து பாரத மக்களின் இதயங்களையும் வெல்ல வேண்டும். இதற்காக பா.ஜ.க நிர்வாகிகளும் தொண்டர்களும் அயராது பாடுபட வேண்டும்” என கூறினார்.