சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் இணைந்து ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளன. அதன்படி, ‘பழங்குடியினர், பாரம்பரிய வனவாசிகளுக்கு ஆதரவான வன உரிமைகளை அங்கீகரித்தல் சட்டம், 2006’ ஐ செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா மற்றும் வன, சுற்றுச்சூழல், காலநிலைத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் அந்தந்த அமைச்சகங்களின் செயலாளர்கள் இது குறித்த கூட்டு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
இச்சட்டம் பழங்குடி சமூகங்களின் சட்ட உரிமைகளை அங்கீகரிக்கும். கடந்த 31 டிசம்பர் 2007ல் நடைமுறைக்கு இச்சட்டம் வந்தது என்றாலும், அச்சட்டத்தின் உண்மையான அமலாக்கம் நடைபெறவில்லை. இதற்காக, அகில பாரத வனவாசி கல்யாண் ஆஸ்ரம் (ஏ.பி.வி.கே.ஏ) இதற்காக பல்வேறு தொடர் முயற்சிகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள வனத்துறையினர், பாரம்பரியமாக வனப்பகுதிகளில் வாழும் சமூகங்களை காடுகளின் ஆக்கிரமிப்பாளர்களாகப் பார்த்த காலனித்துவ மனநிலையிலிருந்து வெளியே வர வேண்டியது அவசியம்.
அவர்கள் பல நூற்றாண்டுகளாக இந்த காடுகளை பாதுகாத்து வருகின்றனர் என்ற உண்மையை உணர வேண்டும். வனத்தில் வாழும் பழங்குடியின மக்களின் சமூக நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது. அவர்கள் தங்கள் வன வளங்களை, திட்டமிட்ட வகையில், சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும்.