வெளிநாட்டு ஊடகங்களின் புதிய டூல்கிட்?

அத்திக் அகமதுவின் கொலை குறித்து செய்தி வெளியிடும் ஏறக்குறைய அனைத்து வெளிநாட்டு ஊடக நிறுவனங்களும் அத்திக் அகமதுவை ஒரு முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி கொல்லப்பட்டார் என்று தங்கள் செய்தி அறிக்கைகளில் கூறுகின்றன. ஆனால், அவர் ஒரு முன்னாள் மாஃபியா கும்பல் தலைவர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டவர், பல கொலை, கொள்ளை, மிரட்டல் என நூற்றுக் கணக்கான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதை அவை கூறாமல் தவிர்த்துவிட்டன. அவரது குற்றப் பின்னணியை விட அரசியல் பிண்ணனிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்தன. இதன் மூலம் பாரதத்தின் புகழை கெடுக்கும் அவற்றின் அப்பட்டமான நோக்கம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது. இதனை ஊகிக்க நமக்கு பெரிய ஞானம் ஒன்றும் தேவையில்லை. இதனால், அத்திக் அகமதுவின் கொலையை, வெளிநாட்டு ஊடகங்கள் ஒரு புதிய டூல் கிட்டாக பயன்படுத்துகின்றனவா? என்ற சந்தேகமும் எழுகிறது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 16) வெளியிட்ட அதன் அறிக்கையில், அத்திக் அகமதுவை ‘முன்னாள் எம்.பி’ என்று குறிப்பிட்டது. எனினும் அவரது குற்றவியல் வரலாறு குறித்தும் போகிறபோக்கில் குறிப்பிட்டது. உத்தரப் பிரதேச காவல்துறை முன்பு நடத்திய என்கவுண்டர்கள் குறித்து பி.பி.சி சந்தேகம் எழுப்பியுள்ளது. அசோசியேட்டட் பிரஸ் நிறுவனமும் இதேபோன்ற தந்திரங்களைப் பயன்படுத்தியது. ஆனால் ஒரு படி மேலே சென்று ‘ஜெய் ஸ்ரீம் ராம்’ என்ற புனிதமான ஹிந்து கோஷத்தை அரக்கத்தனமாக்குவதில் அது முனைப்பை காட்டியது. மேற்கத்திய ஊடகங்கள் பாரதத்தின் புகழை சர்வதேச அளவில் கெடுக்கும் வகையில் பொய்யான தகவல்களையும், பாதி உண்மைகளையும் பயன்படுத்தும் இந்தப் புதிய டூல்கிட்டுக்கு விதிவிலக்காக ரஷ்யா டுடே என்ற ரஷ்ய ஊடகம் மட்டுமே, அத்திக் அகமது, மாஃபியா, தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய உண்மையை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, பி.பி.சி, வாஷிங்டன் போஸ்ட், சி.என்.என், ராய்ட்டர்ஸ் போன்ற இதே ஊடக நிறுவனங்களும் அவை சார்ந்த நாடுகளும் அவற்றின் அறிவுஜீவிகளும், ஐ.நாவில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிப்பதில் இருந்து பாரதம் ஏன் இன்னும் விலகியுள்ளது என்று கேள்வி எழுப்புகின்றனர். இதேபோல, பாரதத்தில் கொரோனா பரவலின் 2வது அலை, விவசாய போராட்டம், சி.ஏ.ஏ போராட்டம் போன்றவை குறித்து சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகளை எப்படி வெளியிட்டன என்பதும் சற்றே சிந்திக்கத்தக்கது.