வெளிநாட்டுத் தலைவர்கள் பாரதம் வருகை

ரஷ்ய உக்ரைன் பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து வெளிநாட்டு தலைவர்கள், அமைச்சர்கள், உயர்மட்டத் தூதுவர்கள், அதிகாரிகள் என பலரும் பாரதம் வந்துகொண்டுள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல், சீனா, இலங்கை என இந்த பட்டியலின் நீளம் அதிகம். இது உலக அரசியலில் நமது பாரதத்தின் மிக முக்கிய பங்கை எடுத்துரைக்கிறது. சுவாரசியமாக, இந்த மாற்றங்கள் எல்லாம் 2014க்குப் பிறகே ஏற்பட்டுள்ளது என்பது வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும் யாரும் அறியலாம்.

அந்த வரிசையில், தற்போது பாரதம் வந்துள்ள அர்ஜென்டினா வெளியுறவுத்துறை அமைச்சர் சாண்டியாகோ கஃபிரோ, நேற்று பாரத வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது, வேளாண்மை, மருந்து உற்பத்தி, மின்னணு துறை, பாதுகாப்பு மற்றும் அணு எரிசக்தி ஆகிய துறைகளில் இரு நாடுகளும் மேலும் ஒத்துழைத்து செயல்படுவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், ஜி 20 அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளில் பாரதமும் அர்ஜென்டினாவும் இணைந்து செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, போலந்து வெளியுறவு அமைச்சர் ரெய்சினாவும் பாரதம் வந்துள்ளார். கடந்த ஒன்பது ஆண்டுகளில் போலந்து வெளியுறவுத்துரை அமைச்சர் ஒருவர் பாரதம் வருவது இதுவே முதல்முறை. பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்திக்க உள்ளார்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தூதுக்குழுவும் பாரதம் வந்துள்ளது. அவர்கள், பாரத வெளியுறவுத்துரை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றனர். சுற்றுசூழல், வர்த்தகம், தொழில்நுட்பம், வெளியுறவுக் கொள்கைகள் மட்டுமில்லாமல் உக்ரைன் ரஷ்ய விவகாரம் உட்பட பல சர்வதேச விவகாரங்களும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படவுள்ளது.