விண்வெளி துறையில் அன்னிய முதலீடு

விண்வெளி துறையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அத்துறையில் அன்னிய நேரடி முதலீடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக டி.பி.ஐ.ஐ.டி., என்னும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் செயலர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சவுதி அரேபிய நிறுவனங்கள், இந்தியாவில் விமானப் போக்குவரத்து, பார்மா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புகள் உள்ளன.மேலும், இராணுவம், செயற்கை நுண்ணறிவு, ‘ரோபாட்டிக்ஸ், சைபர் செக்யூரிட்டி, ஆட்டோமேஷன்’ மற்றும் விண்வெளி துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

இதுமட்டுமின்றி, விண்வெளி துறையில் அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், அத்துறையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்சமயம் விண்வெளித் துறையில் செயற்கைக்கோள் நிறுவுதல் மற்றும் செயல்படுத்துதலில் அரசு வழிகாட்டுதலில் மட்டுமே அன்னிய நேரடி முதலீடு 100 சதவிகிதம் வரை அனுமதிக்கப்படுகிறது. பல்வேறு சவுதி நிறுவனங்கள், இந்திய காற்றாலை மற்றும் சூரிய சக்தி துறைகளில் முதலீடு செய்துஉள்ளன.

கடந்த நிதியாண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், 4.38 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, முந்தைய ஆண்டான 2021––22ல், 3.57 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் ஏற்றுமதி 2021––22ல் 73,000 கோடி ரூபாயாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 88,800 கோடி ரூபாயாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் பேசிய சவுதி அரேபியாவின் முதலீட்டு துறை இணை அமைச்சர் பத்ர் அல்பத்ர் கூறியதாவது: இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு உறவுகளை வலுப்படுத்த சவுதி அரேபிய முதலீட்டு அமைச்சகமும் இன்வெஸ்ட் இந்தியாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சவுதி அரேபியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. வர்த்தகம் தொடர்பாக, இன்று 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.