உத்தர பிரசேதம் ராம்பூரில் உள்ள மகாத்மா காந்தி ஸ்டேடியத்தில் சுமார் 2 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு பல்வேறு மருத்துவ உதவி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கான்பூரில் உள்ள அலிம்கோ நிறுவனம், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, நடக்க உதவும் ஊன்றுகோல், காதுகேட்கும் கருவிகள் உட்பட பல பொருட்களை இலவசமாக வழங்கியது. இந்நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் ஏ. நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நக்வி, ‘கடந்த 7 ஆண்டுகளாக சிறந்த நிர்வாகம், அனைத்தும் உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் ஏழைகளின் மேம்பாட்டில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஏழைகளுக்கு மகிழ்ச்சியையும், செழிப்பையும் உறுதி செய்வதுதான் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளும் பணி’ என கூறினார்.