பறக்கும் தட்டு தினம்

பறக்கும் தட்டுகளை Unidentified Flying Object (UFO) எனதான் அனைவரும் குறிப்பிட்டுவோம் ஆனால், அதனை, ‘unidentified aerial phenomena’ என்றே குறிப்பிட்டிருக்கிறது அமெரிக்காவின் பென்டகன். அதாவது, “UFO குறித்த செய்தி, வீடியோக்களில் அதில் இருப்பது இன்னும்என்னவென்பது தெளிவாக தெரியவில்லை” என்றே பென்டகன் கூறிவருகிறது.

N = R* • fp • ne • fl • fi • fc • L …  என்பது நாம் வாழும் இந்தப் பால்வெளியில் (Milky way Galaxy) நம்மைப் போலவே வேறு ஒரு நாகரிகம் (ஏலியன்ஸ்) தோன்றியிருக்குமா எனக் கண்டறிவதற்கான ஒரு கணிதச் சமன்பாடு. Drake Equation என அழைக்கப்படும் இது முழுக்க முழுக்க ஒரு சம்பவிக்கக்கூடிய தன்மை கொண்ட ஒன்றாக, ஒரு நிகழ்தகவாக பார்க்கப்படுகிறது.

பால்வெளியில் உள்ள நட்சத்திரங்கள், கோள்கள் பற்றி எந்த துல்லியத் தகவலும் இல்லை என்றாலும் தோராய கணக்கீடு அடிப்படையில், நம் பால்வெளியில் மட்டும் 110 கோடிக்கும் அதிகமாக வேற்று கிரக வாசிகளின் நாகரீகங்கள் வரை தோன்றியிருக்கலாம் என்கிறது இந்தச் சமன்பாடு.

2007, 2017ல் பறக்கும் தட்டு போன்ற மூன்று பொருள்கள் உண்மைதான் என அமெரிக்காவின் பென்டகன் ஆய்வகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, வேற்று கிரகவாசிகளுடன் தொடர்பில் உள்ளது, செவ்வாய் கிரகத்தில் அதற்கான ‘பேஸ்’ உள்ளது என ஆறு மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்ற ஒரு இஸ்ரேல் விஞ்ஞானி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஏலியன்கள் என நாம் அழைக்கும் வேற்றுகிரகவாசிகள் பயன்படுத்தும் பறக்கும்தட்டுகளை பலர் பார்த்ததாக கூறுகின்றனர். ஆனால், அவைதான் ஏலியன்களின் வாகனமா? இவற்றில் பெரும்பான்மை நிகழ்வுகள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. ஏன் ஏலியன்கள் அமெரிக்காவை மட்டும் அடிக்கடி சுற்றி வருகின்றன, அப்படி என்ன அவைகளுக்கு அங்கு பிடித்திருக்கிறது? ஏலியன்கள் தரையில் இறங்காமல் ஏன் நம் வான் பகுதிவரை வந்து விட்டு ஏன் அப்படியே சென்று விடுகிறார்கள்? ஒருவேளை, ஏலியன்கள் பறக்கும் தட்டு மூலம் நம்மைப் பார்வையிட அடிக்கடி பூமிக்கு வருகிறார்கள் என்றால், தொழில்நுட்பத்திலும், புத்திசாலித்தனத்திலும் நம்மை விடப் பல மடங்கு மேலானவர்களாக அவர்கள் இருக்கக்கூடும் என்றால், அவர்கள் நம்முடன் நட்பு பாராட்ட நினைப்பார்களா அல்லது நம்மை அடிமைப்படுத்த நினைப்பார்களா? என்பது எல்லாம் மில்லியன் டாலர் கேள்வி.

சங்கீதா சரவணகுமார்