அமெரிக்காவின், இன்டியானாபோலிஸ் நகரில், ‘பெட்எக்ஸ்’ கூரியர் நிறுவனத்தின் மையத்தில் சமீபத்தில் அதன் மாஜி ஊழியர் துப்பாக்கியால் சுட்டதில், நான்கு சீக்கியர்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். ஐந்து லட்சம் சீக்கியர்கள் அமெரிக்காவில் உள்ளனர். கடந்த, 2001ல் பல்பீர் சிங் என்பவரை தலையில் டர்பன் அணிந்திருந்த காரணத்தால் முஸ்லிம் என தவறாக கருதி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். 2012ல் ஓக் க்ரீக் நகரில் குருத்துவாராவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஏழு சீக்கியர்கள் உயிரிழந்தனர். கொலை மிரட்டல் சம்பவங்களும், நாட்டைவிட்டு வெளியேற நிர்பந்தங்களும்கூட நடந்துள்ளது. சமீப காலமாக, அமெரிக்காவில் சீக்கியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதனால் சீக்கிய சமூகம் அச்சத்தில் உள்ளது. இதனை சரிசெய்யும் விதமாக, சீக்கியர்களுக்கு பாராட்டுதெரிவிக்கும் விழிப்புணர்வு மாதம் கடைப்பிடிக்க வேண்டும் என, அம்மாகாண எம்.பியான ராஜா கிருஷ்ணமூர்த்தி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.