தமிழகத்தில் வெள்ளை நிற போர்டு, சாதாரண அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி உள்ளது. ஆனால் அவசரத்தில் சில பெண்கள் டீலக்ஸ், சொகுசு பஸ்களில் ஏறி விடுகின்றனர். இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண கட்டண பஸ்சின் நிறத்தை ‘பிங்க்’ நிறத்தில் மாற்றம் செய்ய முடிவெடுத்தது போக்குவரத்து துறை. அதன்படி ‘பிங்க்’ நிற பஸ்கள் இயக்கத்தை உதயநிதி ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார். ஆனால், பேருந்தின் முன் பக்கமும் பின் பக்கமும் மட்டும் ஏதோ லிப்ஸ்டிக் போட்டதுபோல பிங்க் நிறம் பூசப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்தது. சமூக உடகங்களில் கடந்த சில நாட்களாக விவாதப்பொருளாக இருந்ததே இந்த பிங்க் லிப்ஸ்டிக் பஸ் தான். இந்நிலையில், வேறுவழியின்றி, அந்த பேருந்துகளை முழுமையாக பிங்க் நிறத்திற்கு மாற்றும் நடவடிக்கையை போக்குவரத்துத்துறை எடுத்துள்ளது. பேருந்துகளுக்கு முழுமையாக பிங்க் நிற பெயிண்ட் அடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.