ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம்

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ஸ்ரீராமருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக தேசம் முழுவதிலும் இருந்து பக்தர்களிடம் நன்கொடையும் பெறப்பட்டது. இதனை சாக்காக வைத்து சிலர் மோசடியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் மூலம் மோசடியாக பணம் பெறுவதை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதனையடுத்து நொய்டா, லக்னோவை சேர்ந்த சைபர் கிரைம் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், ‘ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளை அயோத்தியா’ என்ற பெயரில் ஒரு இணையதளம் தொடங்கி, அதில், ஒரு வங்கிக் கணக்கு எண்ணை பதிவிட்டு, கோயிலின் பெயரில் நன்கொடை வசூலித்துள்ளனர். இதில் மக்களிடம் இருந்து லட்சக்கணக்கான பணத்தை இவர்கள் மோசடியாகப் பெற்றுள்ளனர். கைது செய்யப்பட்டதில் 3 பேர் அமேதியையும் 2 பேர் பீஹாரையும் சேர்ந்தவர்கள். இந்த ஐவரும் கிழக்கு டில்லியின் தங்கியிருந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.