பேஸ்புக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் வாட்ஸ்அப் தற்போது வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடி அதிகளவிலான பணத்தைச் சம்பாதித்து வருகிறது. எங்களது கனவு, கொள்கை அனைத்தையும் மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா சீர்குலைத்துள்ளது என வாட்ஸ்அப்பின் முன்னாள் தலைமை வர்த்தக அதிகாரியான நீரஜ் அரோரா டுவிட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். இவர், 2014ல் வாட்ஸ்அப் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாக இருந்த போதுதான் பேஸ்புக்கிற்கு வாட்ஸ்அப்பை 22 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்யும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். அவரது டுவிட்டர் பதிவில், ‘2013ல் வாட்ஸ் அப்பை கையகப்படுத்த மார்க் சக்கர்பெர்க் எங்களை அணுகினார். முதலில் நாங்கள் மறுத்துவிட்டோம். இதன் பின்பு வேகமாக வளர முடிவு செய்தோம். 2014ல், எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷனுக்கான முழு ஆதரவு, பயனர் தரவுகளைச் சுரண்ட கூடாது, எப்போதும் விளம்பரங்களுக்குத் தடை, தயாரிப்பு முடிவுகளில் முழுமையான சுதந்திரம், இதன் நிறுவனர் ஜான் கோமுக்கு பேஸ்புக் நிர்வாகக் குழுவில் இடம், அமெரிக்க மவுண்டன் வியூவில் சொந்த அலுவலகம் என்ற சில முக்கிய நிபந்தனைகளுடன் இணைந்தோம். பேஸ்புக் இதனை ஒப்புக்கொண்டது. மெட்டா நிறுவனத்தில் வாட்ஸ்அப் 2வது பெரிய தளமாக இருக்கிறது. எல்லாம் சரியாக இருக்கிறது என நினைத்த போது 2017, 2018களில் பேஸ்புக் வித்தியாசமாக நடக்கத் துவங்கியது. 2018ல் பேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா ஊழல் விவரங்கள் வெளிவந்தது. பேஸ்புக் தனது தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும். பேஸ்புக் ஒரு அரக்கனாக மாறும் என்று ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாது. இன்று வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடி அதிகளவிலான பணத்தைச் சம்பாதித்து வருகிறது’ என தெரிவித்துள்ளார்.