முகநூல் குறைதீர் அதிகாரி

சமூக ஊடகங்கள், ஓ.டி.டி போன்றவற்றை முறைப்படுத்த, மத்திய அரசு புதிய தொழில்நுட்ப விதிகளைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி 50 லட்சத்துக்கும் மேல் பயனாளர்கள் உள்ள சமூக ஊடகங்கள் குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.இந்த அதிகாரிகள் பாரதத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். இவர்களைப் பயனாளர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவையும் வழங்க வேண்டும். பயனாளர்களின் புகார்களைப் பெற்றதற்கான ஒப்புகையை 24 மணி நேரத்துக்குள் இந்த அதிகாரிகள் கொடுக்க வேண்டும். மேலும் 15 நாட்களுக்குள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதன்படி முகநூல் நிறுவனத்தின் குறைதீர்ப்பு அதிகாரியாக ஸ்பூர்த்தி பிரியா நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவரைப் பயனாளர்கள் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம் என்றும் அதன் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல கூகுள், வாட்ஸ் அப் நிறுவனங்களும் குறைதீர்ப்பு அதிகாரிகளை நியமனம் செய்துள்ளன. அதன் விவரங்கள் அவற்றின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசியல்வாதிகள், பிரபலங்கள் ஆகியோரின் பதிவுகளும் சாதாரண மக்களின் பதிவுகளைப் போலவே கருதப்படும் என இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிட்டத்தக்கது.